சாலைக்கிராமம் பள்ளி மைதானம் புதர்மண்டி கிடப்பதால் சிக்கல்
சாலைக்கிராமம்: சாலைகிராமம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் செடிகள்,புற்கள் வளர்ந்து மாணவர்கள் விளையாட முடியாத சூழ்நிலை உள்ளதால் மாணவர்களின் விளையாட்டுத் திறமை கேள்விக்குறியாக இருப்பதாக முன்னாள் மாணவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.கடந்த கல்வியாண்டில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற இப்பள்ளியில் 10 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு மைதானம் உள்ளது.ஆனால் மைதானம் கடந்த 10 வருடங்களாக போதிய பராமரிப்பின்றி கருவேல மரங்கள், செடிகள், புற்கள் வளர்ந்து காணப்படுவதினால் மாணவர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.மேலும் மைதான வளாகத்திற்குள் பாம்பு,தேள் போன்ற விஷப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதினால் மாணவர்கள் மைதானத்திற்கு பக்கமே செல்வதற்கு அச்சப்பட்டு வருகின்றனர். இதனால் மாணவர்களின் விளையாட்டுத் திறமையில் கேள்விக்குறி ஏற்பட்டுள்ளதாக முன்னாள் மாணவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.