தேவகோட்டை அருகே அடசிவயலில் சகதிக்காடாக காட்சி அளிக்கும் ரோடு கிராமத்தினர் கலெக்டரிடம் புகார்
சிவகங்கை: தேவகோட்டை ஒன்றியம், காரை ஊராட்சி அடசிவயல் ரோடு குண்டும் குழியுமாகவும், சகதி காடாக போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் இருப்பதாக, கலெக்டர் ஆஷா அஜித்திடம் கிராமத்தினர் புகார் அளித்தனர்.தேவகோட்டை அருகே கோட்டூர் நயினார் கோயில் முதல் அடசிவயல் வரை 2 கி.மீ., துாரத்திற்கு தார் ரோடு உள்ளது. இந்த ரோடு சில ஆண்டிற்கு முன் புதுப்பிக்கப்பட்டது. தொடர்ந்து பராமரிக்காமல் விட்டதால், குண்டும் குழியுமாகவும், மழைகாலத்தில் சகதி காடாக காட்சி அளிக்கிறது. இதனால், வாகனங்களில் செல்ல முடியாமல் பெரிதும் சிரமம் அடைகின்றனர். ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பல முறை புகார் செய்தும் இந்த ரோட்டை புதுப்பித்துதர முன்வரவில்லை. இதையடுத்து அடசிவயல் கிராம மக்கள் நேற்று கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் அளித்தனர். கண்மாய்க்கு தடுப்பு சுவர்
அடசிவயல் கே.ஆர்., மாயாண்டி கூறியதாவது: தேவகோட்டை - கல்லலை இணைக்கும் முக்கிய சாலை சந்திப்பில் அடசிவயல் கிராம ரோடு உள்ளது. இந்த ரோட்டை பல ஆண்டாக புதுப்பிக்காமல் விட்டுவிட்டனர். இதனால், குண்டும் குழியுமாக மாறி, மழை காலத்தில் ரோட்டில் சகதியாக உள்ளதால், வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமம் ஏற்படுகிறது. அதே போன்று அடசிவயல் கண்மாய் கரையில் தடுப்பு சுவர் கட்டாததால், மழை காலத்தில் கரை மண் ரோட்டில் குவிந்து விடுகிறது, என்றார். அடசிவயல் ரோடு போட தீர்மானம்
காரை ஊராட்சி தலைவர் பழனிச்சாமி கூறியதாவது: அடசிவயல் ரோட்டை 500 மீ., க்கு புதுப்பித்து தர, ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி, ஊராட்சி ஒன்றிய பொறியாளர் பார்வைக்கு அனுப்பியுள்ளேன். இது மட்டுமின்றி இந்த ஊராட்சியில் சேதமான 3 ரோடுகளை புதுப்பிக்க கோரிக்கை வைத்துள்ளேன், என்றார்.