காரைக்குடியில் பராமிப்பில்லாத கண்ணதாசன் மணி மண்டபம்
காரைக்குடி, காரைக்குடியில் கண்ணதாசன் மணி மண்டபம் பராமப்பில்லாத நிலையில் புனரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. , காரைக்குடி அருகேயுள்ள சிறுகூடல்பட்டியில் பிறந்தவர் பாடலாசிரியர் கண்ணதாசன். இவர், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், 230க்கும் புத்தகங்களை எழுதியுள்ளார். கண்ணதாசனை கவுரவிக்கும் விதமாக காரைக்குடி புது பஸ் ஸ்டாண்ட் அருகே 1990ம் ஆண்டு மணி மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.54.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மணி மண்டபம் 1992ம் ஆண்டு திறக்கப்பட்டது. வளாகத்தில் கண்ணதாசனுக்கு மார்பளவு சிலையும் வைக்கப்பட்டுள்ளது. மணிமண்டபத்தில் அரசு விழாக்கள், பள்ளி, கல்லூரி விழாக்கள், பொது நிகழ்ச்சி நடந்து வருகிறது. மணிமண்டபம் கட்டப்பட்டு 30 ஆண்டு எட்டிய நிலையில் புனரமைப்பு பணிகள் எதுவும் இதுவரை நடைபெறவில்லை. பெயின்ட் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளது. மண்ட அரங்குகளின் சுவர் அனைத்தும் உடைந்து அச்சுறுத்தும் வகையில் உள்ளது. மின் விளக்குகள், மின்விசிறிகள் பலவும் பழுதாகி கிடப்பதோடு, மின் வயர்களால் விபத்து அபாயமும் நிலவுகிறது. கழிப்பறை டைல்ஸ் கற்கள் முழுவதுமாக பெயர்ந்து பராமரிப்பின்றி, துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதிக்கே யாரும் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. மண்டபத்தில் கண்ணதாசன் குறித்த புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. நுாலகம் ஒன்றும் செயல் பட்டு வருகிறது. ஆனால் நுாலகத்தில் நுாலகர் இல்லை. தவிர, வரவேற்பாளர், துப்புரவு பணியாளர் பணியிடமும் காலியாக உள்ளது. கண்ணதாசனின் படைப்புகளோ வாழ்க்கை வரலாற்று குறிப்புகளோ தொகுப்புகளோ எதுவும் இல்லை. சில புகைப்படங்கள் மட்டுமே உள்ளது.கண்ணதாசன் மணி மண்டபத்தை புனரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் கூறுகையில்: கண்ணதாசன் நினைவாக மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதில் அவரது படைப்புகளை விற்பனை செய்வதோ பார்வைக்கு வைப்பதோ முடியாது. நுாலகம் உள்ளது. கட்டடத்தை புனரமைப்பதற்கு திட்டம் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.