படுகணையில் தேங்கி நிற்கும் நீரால் கடல் போல் காட்சி
திருப்புவனம்: திருப்புவனம் அருகே வைகை ஆற்றில் கட்டப்பட்ட படுகணையில் தேங்கி நிற்கும் நீரால், கடல்போல் காட்சி அளிக்கின்றன. தேனி அருகே மூல வைகையில் உற்பத்தியாகும் வைகை ஆறு தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட குடிநீர், பாசன தேவையை பூர்த்தி செய்கிறது. வலது, இடது பிரதான கால்வாய்கள் மூலம் பாசனத்திற்கு கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. கால்வாய்களில் தண்ணீர் திறக்கவும் நிலத்தடி நீர் மட்டம் உயரவும் 200 முதல் 250 மீட்டர் நீளம் வரை ஆற்றின் அகலத்தை கணக்கிட்டு அமைக்கப்படும். முதன் முறையாக திருப்புவனம் புதூரில் கானூர், பழையனூர் கண்மாய் பாசனத்திற்காக 410 மீட்டர் நீளமுள்ள படுகை அணை கட்டப்பட்டு முதன் முறையாக மழை நீரால் நிரம்பி கடல் போல காட்சியளிக்கிறது. 410 மீட்டர் நீளமுள்ள இந்த படுகை அணையில் வலது புறம் பழையனூர் கண்மாய் பாசனத்திற்காக இரண்டு ஷட்டர்களும், இடது புறம் கானூர் கண்மாய் பாசனத்திற்காக நான்கு ஷட்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, 1,050 ஏக்கர் பரப்பளவுள்ள கானூர் கண்மாயில் எட்டு மடைகள் மூலம் கானூர், கல்லூரணி, வேம்பத்தூர், பச்சேரி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 3,500 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறுகின்றன. மேலும் கானூர் கண்மாயில் 332 மில்லியன் கனஅடி தண்ணீர் தேக்க முடியும், 450 ஏக்கர் பரப்பளவுள்ள பழையனூர் கண்மாயில் 9 மடைகள் மூலம் ஆயிரத்து 200 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறுகின்றன. பழையனூர் கண்மாயில் 190 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்க முடியும். இங்கு ரூ.40.27 கோடியில் கட்டிய படுகை அணை மூலம் பழையனூர், கானூர் கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சம்பா பருவ சாகு படிக்காக விவசாய பணிகள் தொடங்கியுள்ள நிலையில் வைகை ஆற்றில் பரவலாக வரும் மழை நீர் விவசாயத்திற்கு பெரும் உதவியாக இருக்கும். வைகை அணையிலும் 67 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில் சிவகங்கை மாவட்ட பாசன தேவைக்காக தண்ணீர் விரைவில் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். படுகை அணையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தண்ணீர் நிரம்பி இருப்பதால் திருப்புவனம் புதூர், மடப்புரம், கணக்கன்குடி கிராமங்களில் நிலத்தடி நீர் வெகு வேகமாக உயர்ந்து வருகிறது.