இளையான்குடி கோயிலில் உண்டியலை உடைத்து திருட்டு
இளையான்குடி;இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து நடந்த திருட்டு குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு அருகில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட வாள்மேல் நடந்த அம்மன் கோயில் உள்ளது. நவராத்திரி, தை, ஆடி செவ்வாய், வெள்ளிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். நவராத்திரி திருவிழா முடிந்த பிறகு உண்டியலை திறந்து காணிக்கை எண்ணுவது வழக்கம். ஆனால் திறக்கப்படவில்லை. தற்போது ஆடி என்பதால் உண்டியலில் காணிக்கை அதிகம் இருந்துள்ளது. நேற்று காலை கோயிலை திறந்து பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு இளையான்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கோயிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவுகளை பார்த்தபோது இரவு ஒருவர் கோயில் சுற்றுச்சுவர் வழியாக ஏறி குதித்து உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரிந்தது. அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.