அமைச்சர் ஊருக்கு பஸ் வசதி இல்லை
திருப்புத்துார்: திருப்புத்துாரிலிருந்து மதுரைக்கு அரசு பஸ் வசதி ஏற்படுத்த பயணிகள் கோரியுள்ளனர். திருப்புத்துார் வழியாக மதுரை- - தஞ்சாவூர், காரைக்குடி- -மதுரை, தேவகோட்டை - -மதுரை ஆகிய வழித்தடங்களில் அரசு,தனியார் பஸ்கள் செல்கின்றன. விடுமுறை,முகூர்த்த நேரங்கள் உள்ளிட்ட பெரும்பாலான நாட்களில் இந்த பஸ்கள் இருக்கைகள் நிரம்பிய பயணிகளுடன் திருப்புத்துார் பஸ் ஸ்டாண்ட் வருகின்றன.மதுரை செல்லும் திருப்புத்துார் பயணிகளுக்கு இருக்கை கிடைப்பதில்லை. நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.இதே போன்று மதுரை எம்.ஜி.ஆர். பஸ் ஸ்டாண்டில் திருப்புத்துார் பயணிகளை முதலில் ஏற அனுமதிப்பதில்லை. அதிகாரிகள் பல சமாதானக் கூட்டங்களை நடத்தியும் சில நாட்கள் மட்டுமே பஸ்களில் ஏற்றுவர். மீண்டும் பழைய நிலையே தொடரும்.இந்நிலையில் திருப்புத்துார் வழியாக திருமயம் -- மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச் சாலை வந்த பின் பல மதுரை- - தஞ்சாவூர் பஸ்கள் நகருக்குள் வராமல் புறவழிச்சாலையில் சென்று விடுகின்றன. அடுத்து மேலுார்- - காரைக்குடி 4 வழி தேசிய நெடுஞ்சாலை பணிகள் முடிந்த பின் பல பஸ்கள் நேரிடையாக மதுரை, காரைக்குடி செல்லும் வாய்ப்பு உருவாகி விடும். இதனால் திருப்புத்துார் பயணிகள் பஸ் வசதியை இழக்க வேண்டியுள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சராகவும், திருப்புத்துார் தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும் பெரிய கருப்பன் இருந்தும் மக்கள் பிரச்னையை தீர்க்கவில்லையே என ஆதங்கப்படுகின்றனர். எனவே திருப்புத்துாரிலிருந்து மதுரைக்கு நேரடி பஸ் வசதியை அரசு போக்குவரத்துக் கழகம் துவக்க வேண்டியது அவசியமாகும்.