| ADDED : நவ 27, 2025 07:04 AM
திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முக்கிய நகர் தேவகோட்டை.இங்கு நாளுக்கு நாள் மக்கள் தொகை, வர்த்தக நிறுவனங்கள் அதிகரித்து வருகிறது. மேல்நிலைப்பள்ளிகளும் ஒரே ரோட்டில் தான் உள்ளது. இதனால் போக்குவரத்து பயன்பாடும் அதிகமாக உள்ளது. ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் சைக்கிள், டூவீலர்களில் செல்கின்றனர். தேவகோட்டையை பொறுத்தவரை தேவகோட்டை காரைக்குடி ரோடு, வங்கிகள் நிறைந்த தியாகிகள் ரோடு, சிலம்பணி சன்னதி வீதியில் அனைத்து நேரங்களிலும் போக்குவரத்து அதிகமுள்ள பகுதிகளாகும். தேவகோட்டையில் தற்போது விரிவாக்கமாக புது பஸ் ஸ்டாண்ட் கட்டுவதால் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் ராம்நகரில் செயல்படுகிறது. இதன் காரணமாக நகருக்குள் பஸ், வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. தினசரி மார்க்கெட்டும் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு விட்டது. ஆனால் சில கடைகள் அங்கு சென்றாலும் பெரும் பாலான கடைகள் ஏற்கனவே இருந்த பஸ் ஸ்டாண்டிற்கு வெளியே ரோட்டில் செயல்படுகிறது. பொருட்களை வாங்க வரும் மக்கள் ரோட்டில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர்.இந்த பகுதியிலுள்ள ரோட்டின் இருபுறமும் பஸ்சுக்காக மக்கள் கூட்டமாக நிற்கின்றனர். மக்கள் தற்காலிக பஸ் ஸ்டாண்டிற்கும் , தற்காலிக மார்க்கெட்டுக்கும் செல்வதில்லை. பழைய மார்க்கெட் அருகில் ரோட்டில் கடை அமைத்த நிலையில் போலீசார் கண்டு கொள்ளாததால் நிற்க கூட இடமின்றி வரிசையாக கடைகளை போட்டுள்ளனர். ரோட்டின் இரு புறமும் பஸ்கள் அதிக நேரம் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதாலும் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் நெருக்கடி ஏற்படுகிறது. போலீசார் திணறல் போக்குவரத்தை சீர் செய்ய வேண்டிய போக்குவரத்து போலீசார் நான்கு பேர் மட்டுமே உள்ளனர்.பள்ளி பகுதிகளுக்கு சென்று விடுகின்றனர்.இருக்கும் நான்கு பேரில் சிலர் மாற்றுப் பணிக்கு அனுப்பப்படுகின்றனர்.ரெகுலர் போலீசார் பற்றாக்குறையாக இருக்கின்றனர். ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை மார்க்கெட் பகுதிக்கு மாற்றி ஒழுங்கு படுத்த வேண்டும். பழைய பஸ் ஸ்டாண்ட் முன்பு நிற்கும் பஸ்களை வேறு பகுதியில் நிறுத்தவோ அல்லது சற்று தொலைவில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். போக்குவரத்தை ஒழுங்குபடுத்த தேவகோட்டையில் கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.