பயிற்சி டாக்டர் பலி: போலீசார் விசாரணை
சிவகங்கை : சிவகங்கையில் முதுநிலை பயிற்சி டாக்டர் மர்மமான முறையில் பலியானதால் போலீசார் விசாரித்து வருகின்றனர். சிவகங்கை முத்துநகரைச் சேர்ந்தவர் ரெங்கராஜன் மகன் டாக்டர் அருண்குமார் 27. இவர் சிதம்பரம் அண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் எம்.டி., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் டிஆர்பி பயிற்சி 3 மாதம் குன்னுாருக்கு அனுப்பப்பட்டிருந்தார். இவரது நண்பர்கள் அனைவரும் சிதம்பரத்தில் பயிற்சி மேற்கொண்டனர். இவரும் சிதம்பரத்தில் பயிற்சி மேற்கொள்ள அனுமதி கேட்டார் கிடைக்கவில்லை. இதனால் குன்னுார் செல்லாமல் மன அழுத்தத்தில் இருந்த அருண்குமார் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு வீட்டில் தனியாக சுயநினைவின்றி மயங்கிய நிலையில் இருந்தார். அவரது தாயார் மாரியம்மாள் அவரை சிவகங்கை மருத்துவக் கல்லுாரியில் சிகிச்சையில் சேர்த்தார். அங்கு பணியில் இருந்த டாக்டர் அவரை பரிசோதனை செய்து அருண்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டார் என கூறினர். மாரியம்மாள் நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.