உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பயிற்சி டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டம் சிவகங்கையில் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் காத்திருப்பு

பயிற்சி டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டம் சிவகங்கையில் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் காத்திருப்பு

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டரை தாக்கிய வழக்கில் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி நேற்றும் பயிற்சி டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புறநோயாளிகள் பிரிவு, தாய் வார்டு, மகப்பேறு பிரிவுகளில் சிகிச்சைக்கு வந்தவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் செப்.,28 அதிகாலை 12:00 மணிக்கு பயிற்சி டாக்டர்கள் கருணா 23, சாதிக் 23, விஷ்ணு தினேஷ் 23 பணியில் இருந்தனர். சிவகங்கை நேரு பஜாரைச் சேர்ந்த பாலமுருகன் 26, டூவீலர் விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்கு சென்றார். டாக்டர்கள் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்தனர். நரம்பியல் நிபுணர் விடுமுறையில் இருந்ததால் பாலமுருகனுக்கு எடுக்கப்பட்ட சி.டி., ஸ்கேன் அறிக்கையை பயிற்சி டாக்டர்கள் நரம்பியல் டாக்டருக்கு அலைபேசியில் அனுப்பி சந்தேகம் கேட்டனர். பாலமுருகனுடன் இருந்த உறவினர்கள் பயிற்சி டாக்டர்களிடம் ஸ்கேன் அறிக்கையை கேட்டு தகராறில் ஈடுபட்டு பயிற்சி டாக்டர்களை தாக்கினர். டீன் சீனிவாசன் சிவகங்கை போலீசில் புகார் அளித்தார். போலீசார் தகராறில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத 5 பேரில் சூர்யா 27, என்பவரை கைது செய்தனர். அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி அக்.,5ல் பயிற்சி டாக்டர்கள் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். டீன் சீனிவாசன், ஆர்.டி.ஓ., ஜெபி கிரேசியா, டி.எஸ்.பி., பிரதீப் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாட்களுக்குள் தாக்கிய அனைவரையும் கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்தனர். பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தை கை விட்டனர். போலீசார் கொடுத்த உத்தரவாதம் நேற்றுடன் முடிவடைந்தது. நேற்று பாலசுப்பிரமணியன் 39, என்பவரை கைது செய்தனர். இருந்த போதிலும் மற்ற 3 பேரையும் கைது செய்ய வேண்டும், மருத்துவக் கல்லுாரி புற காவல் நிலையத்தில் கூடுதல் போலீசாரை பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை 8:00 மணி முதல் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவுகளில் சிகிச்சைக்கு வந்த பயனாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய சூழல் இருந்தது. பயிற்சி டாக்டர்களிடம் டீன் சீனிவாசன், ஆர்.டி.ஓ., ஜெபி கிரேசியா, டி.எஸ்.பி., அமல அட்வின் பேச்சுவார்த்தை நடத்தினர். மற்ற 3 பேரையும் கைது செய்தால் தான் போராட்டத்தை கைவிடப் போவதாக கூறிதொடர்ந்து பயிற்சி டாக்டர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தவறவிட்ட போலீஸ் செப்., 28 பயிற்சி டாக்டர்களை தாக்கியவர்களை மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் பணியில் இருந்த போலீசார் தான் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். அப்போதே அவர்களை கைது செய்து போலீசாரிடம் ஒப்படைத்திருந்தால் பிரச்னை வந்திருக்காது என்கின்றனர் டாக்டர்கள். போலீசார் கூறுகையில், புகார் எதுவும் அப்போது மருத்துவமனை நிர்வாகத்தினர் கொடுக்கவில்லை, மறுநாள் தான் கொடுத்தனர். அதன் பிறகு தான் சம்மந்தப்பட்டவர்களில் இருவரை கைது செய்தோம். மற்றவர்களை விரைவில் கைது செய்து விடுவோம் என்றனர்.

பிரேத பரிசோதனையில் தாமதம்

பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் அவர்களிடம் மருத்துவக் கல்லுாரி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். இதனால் பிரேத பரிசோதனை செய்ய டாக்டர்கள் மதியம் 12:00 மணிவரை வரவில்லை. பிரேத பரிசோதனைக்கு 4 உடல்கள் இருந்தன. அவர்களின் உறவினர்கள் பிரேத பரிசோதனை அறையின் முன்பு காத்திருந்தனர். உறவினர்கள் கூச்சலிட்டு சத்தம் போட தொடங்கினர். பின்னர் மதியம் 12:00 மணிக்கு மேல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை