ஆதாரில் பெயர், முகவரி மாற்ற முடியாமல் அவதி எல்காட் நிர்வாகத்திற்கு பறக்கும் புகார்
சிவகங்கை:தமிழகத்தில் உள்ள ஆதார் மையங்களில் முகவரி, பெயர் மாற்றம் செய்பவர்களுக்கு கடந்த சில நாட்களாக பதிவேற்றம் ஆவதில்லை என புகார் எழுந்துள்ளது.தமிழக அளவில் கலெக்டர், தாசில்தார், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வங்கிகள் உட்பட பெரும்பாலான அலுவலகங்களில் ஆதார் பதிவு மையம் செயல்படுகிறது. தினமும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை பயன் அடைந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் செயல்படும் அனைத்து ஆதார் மையங்களிலும் சர்வர் பிரச்னையால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.5 வயது குழந்தையின் பெயர் சேர்த்தல், 15 வயதிற்கு பின் மறுபதிவேற்றம் செய்யும் பணிகளில் இடையூறு ஏற்படுவதில்லை. ஆனால் பெயர், முகவரியில் மாற்றம் கோரி பதிவேற்றம் செய்தால் செயல்பாடு ரத்தாகிறது. இதனால் பெயர், முகவரி மாற்றத்திற்கு வருவோரை மைய ஊழியர்கள் திருப்பி அனுப்புகின்றனர்.எல்காட் மேலாளர் ஒருவர் கூறியதாவது: கடந்த 15 நாட்களாக இந்த பிரச்னை ஏற்பட்டு வருகிறது. 'எல்காட்' நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்துள்ளோம், என்றார்.