சீரமைக்கப்படாத கண்மாய்கள் 200 ஏக்கர் பாசனம் கேள்விக்குறி
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே சீரமைக்கப்படாத கண்மாய்களால் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் பாசன நிலங்கள் கேள்விக்குறியாகி வருகிறது. சதுர்வேதமங்கலம் ஊராட்சியில் மங்கலக்கண்மாய், சிலநீர்க்கண்மாய், வாடத்திக்கண்மாய் ஆகியவை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கண்மாய்களாகும். இக்கண்மாய்களின் ஆயக்கட்டாக 200க்கும் மேற்பட்ட ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன. இக்கண்மாய்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்ட நிலையில் தற்போது சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து, மடைகள் மண்மூடி காணப்படுகிறது. வரத்துக் கால்வாய்கள் பல இடங்களில் இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோனது. இதனால் தண்ணீர் வரத்து குறைந்து பாசன நிலங்களின் நிலை கேள்விக்குறியாகி வருகிறது. இத்தாலுகாவில் பல்வேறு பெரிய கண்மாய்கள் தற்போது சீரமைக்கப்பட்டு வரும் நிலையில், சதுர்வேதமங்கலம் ஊராட்சியில் கன்மாய்களில் எந்த பணியும் நடக்கவில்லை. இதனால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். எனவே மழைக்காலம் துவங்குவதற்கு முன்பாக இந்த மூன்று கண்மாய்களிலும் சீமைக் கருவேல மரங்களை அகற்றி, தண்ணீர் தேங்கும் பரப்பு அதிகரித்து சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.