அரசு ஐ.டி.ஐ.,க்களில் பயிற்றுனர் பணியிடம் காலி: மாணவர்கள் அவதி
மானாமதுரை; சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை,சிவகங்கை,அமராவதி புதுார் உள்ளிட்ட அரசு ஐ.டி.ஐ.,க்களில் பெரும்பாலான பயிற்றுனர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, அமராவதிபுதுார்,சிவகங்கை உள்ளிட்ட ஊர்களில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் அரசு ஐ.டி.ஐ.,கள் செயல்பட்டு வருகிறது.இங்கு பயிலும் மாணவர்களுக்கு எலக்ட்ரீசியன்,சர்வேயர், மோட்டார் மெக்கானிக்கல், ஏ.சி,பிரிட்ஜ் மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு தொழிற்கல்வி சம்பந்தமான பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மானாமதுரையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக அரசு ஐ.டி.ஐ., ராஜகம்பீரம் பகுதியில் தனியார் கட்டடத்தில் வாடகைக்கு துவங்கப்பட்ட நிலையில் கடந்த வருடம் மானாமதுரை செய்களத்துார் விலக்கு அருகே புதிதாக சொந்த கட்டடம் கட்டப்பட்டு தற்போது அங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். சில வருடங்களாகவே தமிழகத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,களில் பெரும்பாலான பயிற்றுநர்கள் பணியிடம் காலியாக உள்ளது. மானாமதுரையில் 10 பயிற்றுநர்கள் இருக்கவேண்டிய நிலையில் தற்போது ஒருவர் மட்டுமே பணியாற்றி வருவதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அதிகாரி கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஐ.டி.ஐ.,களில் பெரும்பாலான பயிற்றுநர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் பயிற்றுநர்களுக்கான தேர்வு கடந்த மாதம் முடிவு பெற்றது. இன்னும் ஒரு சில நாட்களில் தமிழகம் முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களில் பயிற்றுநர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.