காரைக்குடி தாசில்தார் அலுவலகத்தில் வி.ஏ.ஓ.,க்கள் முற்றுகை போராட்டம்
காரைக்குடி-: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் தொய்வாக செயல்பட்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட 2 வி.ஏ.ஓ.,க்களுக்கு ஆதரவாக சிவகங்கை மாவட்டம்,காரைக்குடி தாசில்தார் அலுவலகத்தில் அனைத்து வி.ஏ.ஓ.,க்களும் முற்றுகை போராட்டம் நடத்தினர். காரைக்குடி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் அந்தந்த ஓட்டுச்சாவடி அலுவலர் மூலம் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான விண்ணப்பம் வழங்குதல், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை திரும்ப பெறுதல் போன்ற பணிகளில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பணியில் தொய்வாக இருந்ததாக கூறி இரு வி.ஏ.ஓ.,க்களை சஸ்பெண்ட் செய்திருந்தனர். இதை கண்டித்து நேற்று மாலை இத்தாலுகாவில் உள்ள 30 க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.,க்கள் காரைக்குடி தாசில்தார் அலுவலக அறையை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். வி.ஏ.ஓ., சங்க மாநில பொது செயலாளர் செல்வம் கூறியதாவது, இத்தாலுகாவில் அனைத்து வி.ஏ.ஓ.,க்களுக்கும் ஓட்டுச்சாவடி அலுவலர் பணிகளை பார்க்குமாறு நவ., 7 ம் தேதி தெரிவித்தனர். ஆனால், மறு நாள் இரவே பணியில் முன்னேற்றம் இல்லை எனக்கூறி ஆம்பக்குடி வி.ஏ.ஓ., கார்த்திகேயன், செங்காத்தன்குடி வி.ஏ.ஓ., சிவக்குமார், காரைக்குடி சிக்ரி கிராம உதவியாளர் சரவணன் ஆகிய 3 பேர்களையும் தேவகோட்டை சப் --- கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ் சஸ்பெண்ட் செய்தார். இதில், வி.ஏ.ஓ.,க்களை சஸ்பெண்ட் செய்ததை கண்டித்து தான் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தேவகோட்டை சப் - கலெக்டர் பேச்சு வார்த்தை நடத்தி, முடிவு தெரியும் வரை போராட்டம் தொடரும், என்றார். காரைக்குடி தாலுகா அலுவலகத்திற்கு வந்த கலெக்டர் பொற்கொடி வி.ஏ.ஓ.,க்களிடம் பேசினார். வி.ஏ.ஓ.,க் கள் மற்றும் தலையாரி சஸ்பெண்டை ரத்து செய்வதாக உறுதி யளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.