காரைக்குடி அரசு மருத்துவமனையில் ரத்த நாளங்களை இணைக்கும் சிகிச்சை
காரைக்குடி: காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் முதன் முறையாக, 'ஏவி பிஸ்துலா' எனும் ரத்தநாளங்களை இணைக்கும் அறுவை சிகிச்சை நடந்தது. சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் ரத்தத்தை சுத்திகரிக்க டயாலிசிஸ் செய்ய வேண்டி உள்ளது. டயாலிசிஸ் செய்யும் நோயாளிகளுக்கு நரம்பு சுருளுவதால் டயாலிசிஸ் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனைப் போக்கிடும் வகையில், தமனிக்கும் நரம்புக்கும் இடையில் இணைப்பை ஏற்படுத்த செய்யக்கூடிய அறுவை சிகிச்சை ஏவி பிஸ்துலா ஆகும். இச்சிகிச்சைக்காக மதுரை, சென்னை, தஞ்சாவூர் போன்ற அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் செல்ல வேண்டியிருந்தது. இந்நிலையில் நேற்று, காரைக்குடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் அருள்தாஸ் தலைமையில் முதல்முறையாக ஏவி பிஸ்துலா அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. டாக்டர். அருள்தாஸ் கூறுகையில்: காரைக்குடி அரசு மருத்துவமனையில் ரத்த நாளங்களை இணைக்கும் ஏவி பிஸ்துலா அறுவை சிகிச்சை முதன்முறையாக செய்யப்பட்டுள்ளது. இதுவரை நோயாளிகள், இச்சிகிச்சைக்காக மதுரை தஞ்சாவூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டி இருந்தது. வேலன்குடியைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதிக செலவாகும் இச்சிகிச்சை காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் நோயாளிகள் காரைக்குடியிலேயே இந்த அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.