கீழாயூரில் குப்பை கொட்ட கிராம மக்கள் எதிர்ப்பு
சிவகங்கை: இளையான்குடி பேரூராட்சியில் சேகரமாகும் குப்பையை கொட்ட கீழாயூரில் இடம் தேர்வு செய்ததை கண்டித்து கிராம மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். இளையான்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட இளையான்குடி, புதுார், சோதுகுடி, பர்மா காலனி உள்ளிட்ட பகுதிகளில் சேகரமாகும் குப்பையை தாசில்தார், மின்வாரிய அலுவலகங்களுக்கு பின்னால் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர். அரசு அலுவலகங்களுக்கு வரும் அதிகாரிகள், மக்கள் துர்நாற்றத்தால் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். கீழாயூர் அருகே அரசுக்கு சொந்தமான 190 ஏக்கர் நிலத்தில் 2.5 ஏக்கர் இடத்தை தேர்வு செய்து அங்கு, இளையான்குடி பேரூராட்சியில் சேகரமாகும் குப்பையை கொட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு கீழாயூர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நேற்று கீழாயூர், கீழாயூர் காலனி, திருவேங்கடம், கரைக்குடி, மெய்யனேந்தல், லட்சுமிபுரம், நடுவலசை உள்ளிட்ட கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். விவசாயிகள் குறைதீர் கூட்ட அறை முன் கூடி கலெக்டரிடம் மனு அளிக்க வேண்டும் என தெரிவித்தனர். குறைதீர் கூட்ட அரங்கை விட்டு வெளியே வந்த கலெக்டர் பொற்கொடியிடம் கிராமத்தினர் மனு அளித்தனர்.