கிருதுமால் நதியில் தண்ணீர் திறப்பு
திருப்புவனம்; வைகை அணையில் இருந்து கிருதுமால் நதியில் பாசன தேவைக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுர மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை குறித்து செய்தி வெளியானதை அடுத்து நேற்று முதல் கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.வைகை ஆற்றின் உபரி நதியான கிருதுமால் நதி மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் இருந்து திருப்புவனம் தாலுகா வழியாக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராம கண்மாய்கள் வழியாக ராமநாதபுர மாவட்டம் கமுதி குண்டாற்றில் சென்று சேர்கிறது. 80கி.மீ., தூரமுள்ள இந்த நதி மூலம் 15 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் ஒரு லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.சிவகங்கை மாவட்டத்தில் 11 கண்மாய், விருதுநகர் மாவட்டத்தில் 31 கண்மாய், ராமநாதபுர மாவட்டத்தில் 3 கண்மாய்கள் பயன்பெறுகின்றன. தமிழகம் முழுவதும் மழை பெய்து வந்தாலும் கிருதுமால் நதியில் நீர்வரத்தின்றி மதுரை நகரின் ஒட்டு மொத்த சாக்கடை செல்லும் கூவம் நதியாகவே உள்ளது.குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்க வேண்டும் என மூன்று மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து நேற்று காலை முதல் மதுரை விரகனூர் மதகு அணையில் இருந்து கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.டிசம்பர் 1ம் தேதி முதல் எட்டு நாட்களுக்கு வினாடிக்கு 650 கனஅடி வீதம் மொத்தம் 450மில்லியன் கன அடி திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் கூடுதலாக தண்ணீர் திறக்கவும் வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.