களை கட்டிய தீபாவளி விற்பனை
சிவகங்கை: தீபாவளி விற்பனை தாமதமாக துவங்கினாலும் கடைசி நாளான நேற்று அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.சிவகங்கை, காளையார்கோவில், மறவமங்கலம், சாத்தரசன்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு துணி எடுக்க சிவகங்கைக்கு வருவது வழக்கம். கடந்த 3 தினங்களாக தீபாவளி பண்டிகைக்கான விற்பனை களைகட்டியது. ரோட்டோர வியாபாரமும் ஜோராக நடந்தது. நேருபஜார், காந்திவீதி, அரண்மனை வாசல் பகுதியில் கூட்டம் அலைமோதியது. ஆண்கள், பெண்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் விரும்பிய ஆடைகளை வாங்கினர். நேற்று தீபாவளியின் கடைசி நாள் விற்பனை என்பதால் வியாபாரிகளும் ஆர்வமுடன் இருந்தனர். மழை இல்லாததால் வியாபாரம் பரவாயில்லை என்ற நிலையே காணப்பட்டது. பட்டாசு வியாபாரிகள் கூறுகையில், கடைகளில் கூட்டம் இருந்தாலும் வியாபாரம் குறைவு தான், எதிர்பார்த்த அளவு வியாபாரம் இல்லை. பஸ்சில் பட்டாசு எடுத்துச்செல்ல தடை செய்துள்ளனர். இதனால் பெரும்பாலான கிராம மக்கள் பட்டாசு வாங்கி செல்ல முடியவில்லை. இது தவிர சிலர் ஆன்லைனில் பட்டாசு வாங்கியுள்ளனர். இதனால் உள்ளூர் பட்டாசுக்கடை வியாபாரம் குறைந்து போனது என்றனர். இறைச்சி கடைகளில் கூட்டம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று சிவகங்கை மார்க்கெட்டில் மீன் மற்றும் இறைச்சி வாங்க கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், நேற்று காலை முதலே இறைச்சி, மீன் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. கடைகள் மார்க்கெட் என அனைத்து இடங்களிலும் மக்கள் திரண்டனர். இறைச்சி மற்றும் மீன் விலையும் உயர்ந்தது. சீலா மீன் கிலோ 500, நண்டு 200, வஞ்சிரம் 800, வாவல் மீன் 700, இறால் 400, மத்தி 100, ஆட்டுகறி கிலோ 1000, ப்ராய்லர் கிலோ 200க்கும் விற்கப்பட்டது.