அழகப்பா பல்கலையில் கம்போசிட் மிஷின் பயன்பாடின்றி வீணாகும் அவலம் மீண்டும் பயன்பாட்டிற்கு வருமா
காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலை சார்பில் பல லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட கம்போசிட் மிஷின் பயன்பாடின்றி வீணாகி வருகிறது. காரைக்குடி அழகப்பா பல்கலை தாவரவியல் துறை சார்பில் அழகப்பா முன்னாள் மாணவர் பூங்காவில் பயோ கம்போசிட் மிஷின் 2022 ஆம் ஆண்டு பொருத்தப்பட்டது. தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் நிதி உதவியுடன் பூஜ்ய கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் பயோ கம்போசிட் மிஷின் நிறுவப்பட்டது. இதன் மூலம் காகிதங்கள் பிளாஸ்டிக் உலோகங்கள் கண்ணாடி, உணவுக் கழிவு மற்றும் மக்கும் பொருட்களை மறுசுழற்சி செய்து, மீண்டும் பயன்பாட்டிற்கு ஏற்ற மூலப் பொருட்களாக மாற்றம் செய்திடவும், ஜீரோ வேஸ்ட் திட்ட கல்வியை மேம்படுத்தி சுற்றுச் சூழலை பாதுகாக்கவும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த மிஷின் பல மாதங்களாக பயன்பாடின்றி வீணாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. பயனுள்ள திட்டத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தாவரவியல் துறை பேராசிரியர்கள் கூறுகையில்: தேவையற்ற கழிவுகளை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் நோக்கில், பயோ கம்போசிட் மிஷின் அமைக்கப்பட்டுள்ளது.பயன்பாடின்றி வீணாகும் கண்ணாடி பாட்டில்களை அரைத்து பேவர் பிளாக் தயாரிக்கும் பணி நடந்தது. தவிர, பிற கழிவுகளும் மறுசுழற்சி செய்யப்படுகிறது. இதில் உற்பத்தி செய்யப்பட்ட பேவர் பிளாக் கற்கள், அழகப்பா பல்கலை வளாகத்தில், 65 ஆயிரம் சதுர அடி வரை பதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மாணவர்கள் நிதி உதவியுடன் பணிகள் நடந்து வந்தது. தற்போது நிதி பற்றாக்குறை காரணமாக பணிகள் நடைபெறவில்லை. இனி வரும் காலங்களில் 50 ஆயிரம் சதுர அடி நடைபாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நிதி வந்ததும் பணிகள் தொடர்ந்து நடைபெறும்.