திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை: கிராமப்புற பள்ளிகளில் தற்போது 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஊரக திறனாய்வுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அரசு தேர்வுத்துறை சார்பில் ஊரக பகுதி மாணவர்களுக்காக ஊரக திறனாய்வுத்தேர்வு நவ.29 நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எழுத தகுதியுடையவர். நகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாது. மாணவரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவத்தை இன்று முதல் அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் www.dge.tn.gov.inபள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவ்விண்ணப்பத்தை மாணவர்களுக்கு வழங்கி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் வருமானச்சான்றையும் இணைத்து நவ.4க்குள் பெற்றுக்கொள்ள வேண்டும். தேர்வுக் கட்டணமாக ரூ.10ஐ பணமாகப் பெற்றுக் கொள்ள வேண்டும். பூர்த்தி செய்து பெறப்பட்ட விண்ணப்பங்களை தலைமையாசிரியர்கள் நவ.5 வரை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யலாம். பிறகு பதிவேற்றம் செய்ய இயலாது. விண்ணப்ப பதிவேற்றம் முடிந்த பிறகு பள்ளியில் பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்களை முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.