தனிப்பட்டா வழங்க ரூ.10,000 லஞ்சம் : வி.ஏ.ஓ., சிக்கினார்
தென்காசி:தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புத்தூரைச் சேர்ந்தவர் தங்கராஜா 38. இவரது மாமனார் சண்முகவேலுக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் சங்கரன்கோவில் அருகே பெரியூரில் உள்ளது. அந்த நிலப்பட்டாவில் சண்முகவேல் உள்ளிட்ட வேறு சிலரின் பெயர்கள் உள்ளன. சண்முகவேல் பெயருக்கு தனிப்பட்டா கேட்டு ஆன்லைன் மூலம் தங்கராஜா விண்ணப்பித்தார். பெரியூர் வி.ஏ.ஓ., ராஜ்குமார், தங்க ராஜாவிடம் தனிப்பட்டா வழங்க ரூ. 20,000 லஞ்சம் கேட்டார். அந்தளவுக்கு பணம் தர முடியாது என தங்கராஜா கூறினார். தீபாவளிக்கு முன் ரூ. 15000 தரும்படி வி.ஏ.ஓ., கேட்டார். லஞ்சம் தர விரும்பாத தங்கராஜா இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., பால் சுதரிடம் புகார் தெரிவித்தார். டி.எஸ்.பி., பால்சுதர் அறிவுரையின்படி ரசாயன பவுடர் தடவிய ரூ. 10 ஆயிரத்தை நேற்று மதியம் தங்கராஜா வி.ஏ.ஓ., அலுவலகத்தில் ராஜ்குமாரிடம் கொடுத்தார். ராஜ்குமாரை டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, எஸ்.ஐ., ரவி, சிறப்பு எஸ்.ஐ.,கள் தெய்வக்கண் ராஜா, வேணுகோபால், பிரபு மற்றும் போலீசார் கைது செய்தனர். அவரது சொந்த ஊர் அழகநேரியிலுள்ள வீட்டிலும் போலீசார் சோதனையிட்டனர்.