உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / வி.சி., கம்பம் உடைப்பு என வீடியோ பதிவிட்டவர் கைது

வி.சி., கம்பம் உடைப்பு என வீடியோ பதிவிட்டவர் கைது

தஞ்சாவூர்:கும்பகோணத்தில், வி.சி., கொடி கம்பத்தை, பா.ம.க.,வினர் உடைத்து விட்டதாக, சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், பிப்., 23ம் தேதி வன்னியர் சங்கம் சார்பில், சமய நல்லிணக்க மாநாடு நடந்தது. இதில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அப்போது, வளையப்பேட்டையில் வி.சி., கட்சி கொடி கம்பத்தை சிலர் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். சமூக வலைதளங்களில் வி.சி., கொடி கம்பம் சேதப்படுத்தியது குறித்து, இரு சமூகத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக வீடியோ ஒன்று வெளியானது. கும்பகோணம் தனிப்படை போலீசார் விசாரித்து, வீடியோ பதிவிட்ட திருவள்ளூரைச் சேர்ந்த கார்த்தி, 21, என்பவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், வன்முறையை துாண்டி, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் வீடியோ மற்றும் கருத்துகளை வெளியிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.இதற்கிடையே, பா.ம.க., தொண்டர்களால் வி.சி., கொடி கம்பம் சேதப்படுத்தப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. இனிவரும் காலங்களில் எந்த கட்சிக்கு எதிராகவும், இத்தகைய செயல்களில் தொண்டர்கள் ஈடுபடக்கூடாது என, பா.ம.க., தலைவர் அன்புமணி வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை