தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் குதிரையேற்ற பயிற்சி மையம் உள்ளது. பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராஜ்குமார், 41, என்பவர் இதை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த தமிழரசன், 26, பயிற்சியாளராக உள்ளார். அப்பகுதியில் பிரபல டாக்டரின் 10ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி, குதிரையேற்றம் பயிற்சி மையத்தில் ஓராண்டுக்கும் மேலாக பயிற்சி பெற்று வந்தார். சில மாதங்களாக பயிற்சி நேரம் முடிந்த பின், டாக்டர் மகளை மட்டும், தமிழரசன் கூடுதல் நேரம் இருக்கச் சொல்லி உள்ளார்.அப்போது, பயிற்சி அளிப்பதாக கூறி, பாலியல் ரீதியான துன்புறுத்தல்களில் தமிழரசன் ஈடுபட்டார் என கூறப்படுகிறது. மேலும், ஓராண்டாக, மாணவிக்கு அடிக்கடி போன் வாயிலாக பாலியல் டார்ச்சர் கொடுத்து வந்தார் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவி, தன் தந்தையிடம் கூறி அழுதார்.இதையடுத்து, குதிரை பயிற்சி மைய உரிமையாளர் ராஜ்குமாரை, டாக்டர் கண்டித்தார். ஆனால், அதை அவர் கண்டு கொள்ளாமல் தமிழரசனுடன் சேர்ந்து பணம் பறிக்கும் நோக்கத்துடன், 'வெளியில் சொன்னால் அசிங்கப்படுத்தி விடுவோம்' என கூறி, பணம் பேரம் பேசினர்.இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த டாக்டர், போலீசில் புகார் அளித்தார். புகாரின்படி, ராஜ்குமார், தமிழரசனை, பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.