விஷம் குடித்து இறந்த இளம்பெண் 16 நாட்களுக்கு பின் உடல் ஒப்படைப்பு
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், நடுக்காவேரி அரசமரத்தடி தினேஷை, ஏப்., 8ம் தேதி போலீசார் கைது செய்தனர். அப்போது, பொய் வழக்கு போடுவதாக போலீஸ் ஸ்டேஷன் முன், தினேஷின் சகோதரியர் மேனகா, கீர்த்திகா விஷம் குடித்தனர். ஏப்.,9ம் தேதி கீர்த்திகா இறந்தார். இவ்விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் சர்மிளா காத்திருப்பு பட்டியலுக்கும், இரண்டு எஸ்.எஸ்.ஐ.,க்கள், ஒரு ஏட்டு வேறு போலீஸ் ஸ்டேஷனுக்கும் மாற்றப்பட்டனர்.இன்ஸ்பெக்டர் சர்மிளா மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்ய வேண்டும்.தினேஷ் மீது நிலுவையில் உள்ள 13 வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கீர்த்திகா உடலை வாங்க மறுத்து, 16 நாட்களாக, உறவினர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். விசாரித்த நீதிமன்றம், முதலில் உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும். இல்லை என்றால் விதிப்படி போலீசார் அடக்கம் செய்து விடுவர் என, தெரிவித்தது.இதுதொடர்பாக, கீர்த்திகாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம், கலெக்டர், ஆர்.டி.ஓ., தாசில்தார் என, அதிகாரிகள் பேச்சு நடத்தினர். இது தொடர்பான வழக்கு, ஏப்., 28ம் தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவை ஏற்று, 16 நாட்களுக்கு பின், கீர்த்திகாவின் உடலை அவரது உறவினர்கள் நேற்று பெற்றுக்கொண்டனர்.