தஞ்சாவூர்:இந்தியாவின் கலாசாரத்தை விரும்பி, பைக்கில் சுற்றுலா புறப்பட்ட வெளிநாட்டினர், நேற்று முன் தினம், தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு வந்தனர்.நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணியர், 1,500 கி.மீ. துாரம் பைக்கில், சுற்றுலா தலங்கள் மற்றும் கோவில்களுக்கு சென்று வருகின்றனர். அதன்படி, 11 பேர், கடந்த 1ம் தேதி தமிழகம் வந்து, சென்னையில் பல்வேறு இடங்களில் சுற்றிப் பார்த்து விட்டு, 5ம் தேதி மகாபலிபுரத்துக்கு சென்றனர்.அங்கிருந்து புதுச்சேரி, வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்கு சென்றுவிட்டு, திங்கட்கிழமை இரவு தஞ்சாவூரில் வந்து தங்கினர். தஞ்சாவூர் பெரியகோவிலுக்கு சென்றனர்.பின், அரண்மனை, தர்பார் ஹால் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று விட்டு, மதுரைக்கு புறப்பட்டுச் சென்றனர். அங்கிருந்து தேகக்கடி, ஆழபுழா, கொச்சின், மூணாறு என 21 நாட்கள் பயணத்தை முடிந்துக் கொண்டு மீண்டும் ஊருக்கு திரும்ப உள்ளதாக தெரிவித்தனர்.மொத்தம் 5 தம்பதி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் என 11 பேர் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த 74 வயது மூதாட்டியான மோனிகா, 68 வயதான ஜான்ஹேமண்டு என்ற கணவருடன் வந்துள்ளார்.இதுகுறித்து, மோனிகா கூறியதாவது:இந்தியாவின் கலாசாரம் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். இங்குள்ள சுற்றுலா தலங்கள், கோவில்கள் பிரமாண்டமாக உள்ளது. குறிப்பாக கோவில்களின் கட்டடக்கலையை பார்க்கும்போது, எங்களுக்கு வியப்பாக உள்ளது. நாங்கள் 6 மாதம் இந்த சுற்றுலா மேற்கொண்டுள்ளோம். இந்தியாவின் உணவு வகைகளும் எங்களுக்கு பிடிக்கும். மொத்தம் 1,500 கி.மீ., துாரம் சுற்றி பார்க்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.