அரசு அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை
தஞ்சாவூர்:திருச்சி கே.கே. நகர் பகுதியை சேர்ந்த மாலா,59,. இவர் தஞ்சை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக, (சத்துணவு பிரிவு)வில் பணியாற்றினார். 2013-ம் ஆண்டு டிச. 20-ம் தேதி, தஞ்சாவூர் மாவட்டம் துவரங்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அணைக்காடு டி.இ.எல்.சி. பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு சத்துணவுகுறித்த ஆய்வுக்காக சென்றார். அப்போது, துவரங்குறிச்சி அரசினர் உயர்நிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்த ஜோஸ்பின் இந்திரா யுவராணி, துவரங்குறிச்சி மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்த மாரியம்மாள், டி.இ.எல்.சி. பள்ளியில் பணியில் இருந்த ரெஜினாமேரி ஆகிய மூவரிடம் உணவு பொருட்கள் வரவு செலவு பதிவேட்டை வாங்கி கொண்டார். பிறகு, இரண்டு நாட்கள் கழித்து, 2013-ம் ஆண்டு டிச.23ம் தேதி, தஞ்சையில் உள்ள அலுவலகத்திற்கு மூவரையும், வரவழைத்தார். அப்போது, உணவு பொருட்கள் வரவு செலவு பதிவேட்டில் ரிமார்க் எதுவும் எழுது கூடாது என்றால் மூவரும் தலா ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என லஞ்சம் கேட்டுள்ளார். அப்போது, டி.இ.எல்.சி. பள்ளி சத்துணவு அமைப்பாளர் ரெஜினாமேரி தன்னிடம் 500 ரூபாய் தான் உள்ளது என கூறியுள்ளார். அதனை மாலா பெற்றுக்கொண்டார். அதன்பிறகு, ஜோஸ்பின் இந்திரா யுவராணியிடமும், மாரியம்மாளிடம் 2 ஆயிரம் ரூபாய் பணத்தை மறுநாள் அலுவலகத்திற்கு கொண்டு வந்து கொடுத்து விட்டு, உணவு பொருள் வரவு-செலவு பதிவேடுகள் மற்றும் விசிட்டிங் நோட்டுகளை வாங்கி செல்ல மாலா கூறியுள்ளார்.இதில், லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜோஸ்பின் இந்திரா யுவராணி, மாரியம்மாள் ஆகியோர் தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து 2013ம் ஆண்டு டிச.24ம் தேதி, மாலாவிடம் இந்திரா யுவராணி லஞ்சம் வழங்கிய போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் மாலாவை கையும் களவுமாக கைது செய்தனர். இவ்வழக்கு கும்பகோணம் முதன்மை குற்றவியல் நீதிதுறை நடுவர் மன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகபிரியா நேற்று, முன்னாள் நேர்முக உதவியாளர் மாலாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 7 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.