| ADDED : ஆக 04, 2024 09:20 PM
தஞ்சாவூர்:தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டைக்கு, 60டி என்ற டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக வரும் பஸ் மிகவும் சேதமடைந்து விட்டதாக கூறி, வேறு ஒரு பஸ் இயக்கப்பட்டுளள்ளது.இந்த பஸ்சும் மிகுந்த சேதமடைந்த நிலையில், சீட் கூட முழுமையாக இல்லை. இதனால் பெண்கள் பஸ்சில் கீழே அமர்ந்து பயணித்தனர். முதியவர்கள் மிகுந்த அவதியுடன், 20 கி.மீ., துாரம் பயணித்தனர்.பஸ்சில் இருந்த பெண்கள் பலரும், அரசு இலவச பயணம் செய்ய அனுமதிப்பது மிகழ்ச்சியாக இருந்தாலும், டப்பா பஸ்களை கிராமங்களுக்கு இயக்குவது பயமாக இருக்கிறது என, நொந்து கொண்டனர்.ஏ.ஐ.டி.யு.சி., சம்மேளன மாநில துணைத்தலைவர் மதிவாணன் கூறியதாவது:டவுன் பஸ்கள் 12 ஆண்டுகள் தான் இயக்கப்பட வேண்டும் என்ற நிலையில், பஸ்சின் ஆயுள் காலம் முடிந்தும் இயக்கப்பட்டு வருகிறது. பல பஸ்களில் இருக்கைகள் உடைந்தும், தகரங்கள் பெயர்ந்தும் காணப்படுகின்றன.படிக்கட்டுகள் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும். உரிய பராமரிப்பு இல்லாததால், பஸ்கள் அடிக்கடி பழுதாகி, பாதி வழியில் நின்று விடுகின்றன. இதனால் மக்கள் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.