அரசு கலைக்கல்லுாரியில் தண்ணீர் வரவில்லை: மாணவர்கள் முதல்வர் அறை முன்பு முற்றுகை போராட்டம்
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசு கலைக் கல்லுாரி, வரலாற்றுத்துறை மற்றும் வணிக நிர்வாகவியல் துறை பிரிவு உள்ள கட்டடத்தில், குடிநீர் மற்றும் கழிப்பறைகளில், தண்ணீர் சில நாட்களாக வரவில்லை.இது குறித்து மாணவர்கள் கல்லுாரி முதல்வர் மாதவியிடம் தெரிவித்தனர். உடனே, கல்லுாரி முதல்வர், பொதுப்பணித்துறை கட்டடப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். ஆனால் அவர்கள் சரி செய்துக்கொடுக்கவில்லை. இதையடுத்து நேற்றுமுன்தினம் வகுப்புகளுக்கு வந்த மாணவ, மாணவியர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், நேற்று வரலாறு மற்றும் வணிக நிர்வாகவியல் துறை மாணவ, மாணவியர், முதல்வர் அறையை முற்றுகையிட்டனர். இரண்டு மணி நேரம் நடந்த போராட்டத்தை தொடர்ந்து, முதல்வர் மாதவி, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சு நடத்தி, மூன்று நாட்களுக்குள் பழுது பார்க்கப்படும் என உறுதி அளித்ததில், மாணவ, மாணவியர் கலைந்து சென்றனர்.மேலும், சம்பந்தப்பட்ட இரு துறைகளுக்கும் இன்று ஒரு நாள் விடுப்பு அளித்து கல்லுாரி முதல்வர் மாதவி அறிவித்துள்ளார்.இது குறித்து மாணவர்கள் கூறியதாவது:சமீபத்தில் பெய்ந்த மழையால், நீர்தேக்க தொட்டிக்கு செல்லும் மின் இணைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கழிப்பறைக்கு தண்ணீர் வராத சூழலில் அதை பயன்படுத்த முடியவில்லை.மாணவ, மாணவியர் திறந்தவெளியை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. கழிப்பறை குறைவாக உள்ளது. மேலும், குடிநீர் வசதி இல்லாமல் மிகுந்த சிரமத்தை சந்தித்தோம். இதனால் தான் போராட்டத்தில் ஈடுபட்டோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.