உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / ரூ.34.46 லட்சம் வரி பாக்கி; தி.மு.க., ஆபீசுக்கு நோட்டீஸ்

ரூ.34.46 லட்சம் வரி பாக்கி; தி.மு.க., ஆபீசுக்கு நோட்டீஸ்

தஞ்சாவூர்; தஞ்சாவூரில் உள்ள மாவட்ட தி.மு.க., அலுவலகத்துக்கு வரி பாக்கி வைத்துள்ளதால், மாநகராட்சி நோட்டீஸ் அளித்துள்ளது. தஞ்சாவூரில், எம்.கே.மூப்பனார் சாலையில், மாவட்ட தி.மு.க., அலுவலகமான கலைஞர் அறிவாலயம் அமைந்துள்ளது. மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, கடந்த 2010 ஜூலை, 27ல் இந்த அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த அலுவலகம் அன்பழகன் பெயரில் உள்ளது. மாவட்ட தி.மு.க., அலுவலகம் திறக்கப்பட்ட ஆண்டு முதல் 2025 - 26ம் நிதியாண்டு வரையிலான, சொத்து மற்றும் பாதாள சாக்கடை வரியாக, 34 லட்சத்து 46,396 ரூபாயை செலுத்தவில்லை. அதை, '15 தினங்களுக்குள் மாநகராட்சி வரி வசூல் மையத்தில், நிலுவை வரியை செலுத்த வேண்டும்' என, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். தி.மு.க., மாவட்ட அலுவலகம் தரப்பில் கூறுகையில், 'இந்த அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் நுாலகம் உள்ளதால், கமர்ஷியல் வரியை நீக்க வேண்டும் என, மாநகராட்சி அலுவலகத்தில் முன்னாள் எம்.பி., பழனிமாணிக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதுவரை, மூன்று முறைக்கு மேல் மனு அளிக்கப்பட்டும், மாநகராட்சி கண்டுகொள்ளவில்லை. இது குறித்து மாநகராட்சி முடிவு செய்து, வரியை குறைத்து நிர்ணயம் செய்தால், ஒரு சில நாட்களில் வரியை முழுமையாக செலுத்தி விடுவோம்' என்றனர். மாநகராட்சி கமிஷனர் கண்ணனிடம் விசாரிக்க தொடர்பு கொண்ட போது, அவர் போனை எடுக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை