மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் திருட்டு
01-Oct-2025
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
கும்பகோணம்: கும்பகோணம் பகுதியில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நகரில் 32 இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு இன்று காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயிலில் உள்ள வெள்ளைவிநாயகர் கோயில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம், அர்ச்சனை நடந்தது.
அதே போல், கும்பகோணம் உச்சிபிள்ளையார் கோயில், இலுப்பையடி விநாயகர் கோயில், பகவத் விநாயகர், ஜெகநாதபிள்ளையார், வட்டி பிள்ளையார்கோயில், கலங்காமல் காத்த விநாயகர், ரயிலடி கற்பக விநாயகர் ஆகிய கோயில்களில் சிறப்பு அர்ச்சனைகள், சந்தனகாப்பு உள்ளிட்ட பல்வேறு அலங்காரம், வெள்ளிக்கவசம், தங்ககவசம் ஆகியவை சாத்தப்பட்டன. அதிகாலை 4.30 மணிக்கு கோயில்களின் நடைகள் திறக்கப்பட்டு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கும்பகோணம் இலுப்பையடி விநாயகர் கோயிலில் அதிகாலை 4.30 மணி முதல் சிறப்பு அலங்காரம் அர்ச்சனைகள் நடைபெற்றது. பின்னர் உற்சவ விநாயகர் உப்புக்காரத்தெருவில் வீதி உலா நடந்தது. அதே போல் திருப்புறம்பியம் பிரளயம்காத்த விநாயகருக்கு நூற்றுக்கணக்கான லிட்டர் தேனால் நேற்றுமுன்தினம் இரவு தொடங்கி விடிய, விடிய அபிஷேகம் நடந்தது. இந்து மக்கள் கட்சி சார்பில் கும்பகோணம் மடத்துதெரு, பாலக்கரை, காமாட்சிஜோசியர் தெரு உள்ளிட்ட 17 இடங்களிலும், சிவசேனா சார்பில் 6 இடங்களிலும் பாஜக சார்பில் 3 இடங்களிலும் மற்றும் அந்தந்த பகுதி பொதுமக்கள் சார்பில் 6 இடங்கள் என மொத்தம் 32 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மாலை மற்றும் சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர்.
இதையடுத்து விநாயகர் ஊர்வலம் இன்று மாலை 5 மணிக்கு கும்பகோணம் மகாமக குளத்திலிருந்து துவங்குகிறது. நகரில் வைக்கப்பட்டுள்ள 32 விநாயகர் சிலைகளும் வந்தபின் ஊர்வலம் அங்கிருந்து தொடங்கி, நாகேஸ்வரன் வடக்கு வீதி, உச்சிபிள்ளையார்கோயில், பெரியபள்ளிவாசல், ராமசாமி கோயில் சன்னதி, பெரிய தெரு, காந்தி பூங்கா, மடத்து தெரு வழியாக காவிரி ஆற்றின் பகவத் படித்துறையில் கரைக்கப்பட உள்ளது. ஊர்வலத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கும்பகோணம் போலீஸ் டி.எஸ்.பி., பாஸ்கர் செய்துள்ளார்.
01-Oct-2025
29-Sep-2025
25-Sep-2025