ஆதீனத்தை வெளியேற்றிய மக்கள்: பொறுப்புகள் ஒப்படைப்பு
தஞ்சாவூர் ; தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார்கோவில் ஆதீனமாக, திருவாவடுதுறை ஆதீனத்தில் தம்பிரானாக இருந்த, மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள், 28வது குருமகா சன்னிதானமாக நியமிக்கப்பட்டு நிர்வாகம் செய்தார். இந்நிலையில், 54 வயதான இவர், கடந்த மாதம், பெங்களூரை சேர்ந்த ஹேமாஸ்ரீ, 47, என்பவரை பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.இதையடுத்து, சூரியனார்கோவில் ஆதீன ஸ்ரீ கார்யங்களில் ஒருவரான சுவாமிநாத சுவாமிகள், 'ஆதீனமாக பதவி வகிக்கும் தகுதியை அவர் இழந்து விட்டார்' என்றார். இதையடுத்து, ஸ்ரீ கார்யமான சுவாமிநாத சுவாமியை, ஆதீனத்தில் இருந்து நீக்குவதாக கூறி மகாலிங்கசுவாமி நோட்டீஸ் அனுப்பினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lgoydiu9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், நேற்று மாலை சூரியனார்கோவில் மடத்திற்கு வந்த கிராம மக்கள் சிலர், மகாலிங்க சுவாமியை சந்தித்து, 'ஆதீனமாக நீடிக்க வேண்டாம். மடத்தை விட்டு வெளியேற வேண்டும்' என வலியுறுத்தினர்.இதையடுத்து, இருதரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மடத்தை விட்டு ஆதீனம் வெளியே வந்தார். மடத்தின் வாசல் கதவை பொதுமக்கள் பூட்டினர்.பின், சூரியனார்கோவில் ஆதீன நிர்வாக பொறுப்புகளை, அறநிலையத்துறையிடம் ஒப்படைப்பதாக கூறி, கதிராமங்கலம் ஆய்வாளர் அருணாவிடம் கடிதம் மூலம் ஆதீனம் அளித்தார்.பின், நிருபர்களை சந்தித்த அவர், ''முழு பொறுப்பையும் ஒப்படைக்கவில்லை. வேறு இடத்தில் போய் ஓய்வெடுக்கப் போகிறேன்; கர்நாடகா செல்லவில்லை,'' என்றார்.