பைக் - கார் மோதல் மூன்று பேர் உயிரிழப்பு
வல்லம்:தஞ்சாவூரில், கார் மோதியதில் பைக்கில் சென்ற தந்தை, இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் அருகே வல்லத்தை சேர்ந்தவர் அறிவழகன், 37. இவரது மனைவி உஷா, 35. மகள்கள் ரூபா, 10, பவ்யஸ்ரீ, 9, மற்றும் அறிவழகனின் தங்கை மகள் தேஜாஸ்ரீ, 4, ஆகிய ஐந்து பேரும், நேற்று மாலை, பனங்காடில் உள்ள கோவிலுக்கு டூ வீலரில் சென்று விட்டு, மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். மாதாக்கோட்டை பைபாஸ் சாலையில் சென்ற போது, கேரள மாநிலம், திருச்சூரில் இருந்து நாகூர் சென்ற இன்னோவா கார், அறிவழகன் ஓட்டிச்சென்ற டூ வீலர் மீது மோதியது. இதில், டூ வீலரில் சென்ற அறிவழகன், பவ்யஸ்ரீ மற்றும் தேஜா ஸ்ரீ மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். காயமடைந்த உஷா, ரூபா ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தமிழ் பல்கலை போலீசார், காரை ஓட்டி வந்த திருச்சூரை சேர்ந்த முகமது ரியாஸ், 31, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.