உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / கடல் நுரையில் உருவான விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

கடல் நுரையில் உருவான விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

தஞ்சாவூர்:திருவலஞ்சுழி பிரஹன்நாயகி உடனுறை கபர்தீஸ்வர சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலின் இணை கோவிலான திருவலஞ்சுழி பிரஹன்நாயகி உடனுறை கபர்தீஸ்வர சுவாமி கோவில், விநாயகரின் தலங்களாக புராணங்களில் கூறப்படும் 10ல் ஒன்று. இங்குள்ள விநாயகர் சிலை கடல் நுரையால் ஆனதால், மற்ற கோவில்களில் நடப்பது போல் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதில்லை. 10 அங்குல உயரமே உள்ள இந்த வெள்ளை பிள்ளையாருக்கு புனுகு மட்டும் சாத்துவர். மேலும், பச்சை கற்பூரத்தை குறிப்பிட்ட பக்குவத்தில் அரைத்து, விநாயகரின் திருமேனியை தொடாமல், அவர் மேல் மெல்ல துாவி விடுவர். கடந்த 2008ம் ஆண்டு இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, அறநிலைய துறை சார்பில், 4.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் திருப்பணிகள் நிறைவு பெற்றன. இந்நிலையில், 16 ஆண்டுகளுக்கு பின், செப்., 1ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம் மற்றும் முதல் கால யாக பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. தொடர்ந்து ஆறு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை யாக பூஜை, ஜபம், ஹோமங்கள், மகா பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றன. காலை 10:00 மணிக்கு, ராஜகோபுரம் முதலான அனைத்து விமானங்களுக்கும், சம காலத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பிரஹன்நாயகி சமேத கபர்தீஸ்வர சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றி, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் சுவாமிநாதன், துணை கமிஷனர் உமாதேவி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ