பிரதமர் மோடி தொடங்கி வைத்த ரூ.56 கோடி நவக்கிரக கோயில் வளர்ச்சி பணி நடக்குமா
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், திங்களூர் கைலாசநாதர் கோவில் -- சந்திர ஸ்தலம், திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவில் - ராகு ஸ்தலம், சூரியனார் கோவில் சிவசூரியன் - சூரிய ஸ்தலம், கஞ்சனுார் அக்னீஸ்வரர் கோவில் - சுக்கிர ஸ்தலம், திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் - குரு ஸ்தலம்.மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவில் வைத்தியநாத சுவாமி கோவில் - செவ்வாய் ஸ்தலம், திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் - புதன் ஸ்தலம், கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோவில் - கேது ஸ்தலம் மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் - சனி பகவான் ஸ்தலம் என ஒன்பது நவக்கிரக கோவில்கள் உள்ளன.இந்நிலையில், மத்திய சுற்றுலா அமைச்சக பிரசாத் மற்றும் சுதேசி தர்ஷன் 2.0 திட்டத்தில், தமிழகத்தின் எட்டு நவக்கிரக கோவில்களுக்கு 36 கோடி ரூபாய், திருநாள்ளாறு சனிபகவான் கோவில் மற்றும் கரைக்கால் கடற்கரை மேம்பாட்டிற்காக 20.30 கோடி ரூபாய் என வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2024, மார்ச் 7ல், பிரதமர் மோடியால், திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.இத்திட்டம் துவக்கி ஒன்பது மாதங்களாகியும், இதுவரை நிதியும் வழங்கவில்லை, பணியும் துவங்கப்படவில்லை. இப்பணியை உடனே துவங்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மத்திய அரசின் கீழ் உள்ள சுற்றுலா அமைச்சகம் சார்பில் திட்டம் செயல்படுத்த அறிவிக்கப்பட்டதால், இது தொடர்பான தகவல்கள் இதுவரை கோவில்கள் நிர்வாகத்திற்கு தெரியவில்லை. பணிகள் தொடர்பாக எந்த முன்னேற்பாடும் செய்யவில்லை என அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.