பெரியகுளம் அருகே வெடிகுண்டு பறிமுதல் நாட்டு குண்டு வெடித்ததில் நாய் பலி
பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் நடுப்புரவு காடுவெட்டி பகுதியில் கருப்பையா என்பவரின் புளியந்தோப்பு பகுதியில் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, நாட்டு வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்த போது, வெடிகுண்டை கடித்து நாய் தலை சிதறி பலியாகி கிடந்தது. வெடிகுண்டை பதுக்கிய சிவக்குமார், 30, என்பவர் பிடிபட்டார். அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் ஆனந்தராஜ், 30, தப்பினார். சிவக்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.அப்போது, காட்டுப்பன்றிகள் போன்ற வன விலங்குகளை வேட்டையாட தோட்டங்களில் பதுக்கி வைத்திருந்த, 29 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர். மிகவும் ஆபத்தான இந்த நாட்டு வெடிகுண்டுகள், மதுரை வெடிபொருட்கள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டன.இதற்கிடையே, திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே செந்துறை ரோட்டில் உள்ள கலைநகரில், குடியிருப்பு பகுதி முட்புதரில் 25-க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகள் கேட்பாரற்று கிடந்தன. நத்தம் போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், அவை, திருவிழாவிற்கு பயன்படுத்தப்படும் பட்டாசுகள் என்பது தெரிந்தது. இதையடுத்து பட்டாசு கடை உரிமையாளர்கள் மதிவாணன், 32, மதன்குமார், 34, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.