இருளில் தத்தளிக்கும் மூணாறு
மூணாறு, : 'ஹைமாஸ்' விளக்குகள் எரியாததால் மூணாறு நகர் இருளில் தத்தளிக்கிறது.சுற்றுலா நகரான மூணாறில் போதிய அளவில் தெரு விளக்குகள் இல்லை என்பதால் பல பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன. அதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.நகரில் முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்ட 'ஹைமாஸ்' விளக்குகளின் வெளிச்சம் சற்று ஆறுதலாக இருந்தது. சமீபத்தில் அந்த விளக்குகள் அனைத்தும் பழுதடைந்ததால் மூணாறு நகர் இருளில் தத்தளித்து வருகிறது. உலக அளவில் பிரசித்தி பெற்ற சுற்றுலா நகர் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர். இது குறித்து ஊராட்சி துணைத்தலைவர் பாலசந்திரன் கூறியதாவது: மூணாறு நகர், பழைய மூணாறு ஆகிய பகுதிகளில் உள்ள ஏழு ஹைமாஸ் விளக்குகள் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டன. அவற்றிற்கு மூன்று ஆண்டுகள் உத்தரவாதம் தரப்பட்டது. அதன் பிறகு பலமுறை பழுதடைந்து சீரமைக்கப்பட்டன. தற்போது அவற்றை சீரமைக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால் மாற்று ஏற்பாடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.