உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குறையுது பெரியாறு அணை நீர்மட்டம்; தமிழகப்பகுதி நீர் திறப்பும் குறைப்பு

குறையுது பெரியாறு அணை நீர்மட்டம்; தமிழகப்பகுதி நீர் திறப்பும் குறைப்பு

கூடலுார் : முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்து வருவதால் தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 356 கன அடியாக குறைக்கப்பட்டது.கடந்த சில நாட்களாக தொடரும் கடுமையான வெப்பத்தால் இந்த அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 114.65 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). நீர்ப் பிடிப்பு பகுதியான தேக்கடி, பெரியாறில் மழையின்றி கடுமையான வெப்பம் நிலவுகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து இல்லை. நீர் இருப்பு 1668 மில்லியன் கன அடியாகும். அணையில் 108 அடிக்கும் மேல் உள்ள தண்ணீரை மட்டுமே தமிழகப் பகுதிக்கு பயன்படுத்த முடியும். இதனால் நீர் திறப்பு 400 கன அடியில் இருந்து வினாடிக்கு 356 கன அடியாக குறைக்கப்பட்டது.தென்மேற்கு பருவமழை ஜூனில் துவங்கும். அதுவரை குடிநீருக்காக அணை நீரை நம்பியுள்ள தேனி மாவட்ட மக்களுக்கு பற்றாக்குறை இன்றி, வினியோகம் செய்வதற்காக நீர் திறப்பு குறைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் மின் உற்பத்தி 36 மெகாவாட்டில் இருந்து 32 ஆக குறைக்கப்பட்டது.

வைகை அணையில் பாசன நீர் திறப்பு

வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு நிறுத்தப்பட்ட நீர், 2 நாட்களுக்குப் பின் மீண்டும் திறந்து விடப்பட்டது.மதுரை, திண்டுக்கல் பாசனத்திற்காக கால்வாய் வழியாக டிச. 18 முதல் வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. முறைப்பாசன அடிப்படையில் பிப். 28ல் வினாடிக்கு 650 கன அடி வீதம் திறக்கப்பட்ட நீர், மார்ச் 5ல் வினாடிக்கு 200 கன அடியாக குறைக்கப்பட்டது. பின் மார்ச் 7 ல் நிறுத்தப்பட்டது.பின், நேற்று காலை 6:00 மணிக்கு வினாடிக்கு 650 கன அடி வீதம், மீண்டும் திறக்கப்பட்டது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி,- சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 72 கன அடி வீதம் வழக்கம் போல் நீர் வெளியேறுகிறது. அணைநீர்மட்டம் 60.47 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 71 அடி). நீர் வரத்து வினாடிக்கு 184 கன அடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை