சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
தேனி; உத்தமபாளையத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலிதொழிலாளி செந்திலுக்கு 39, ஐந்தாண்டுகள் சிறை தண்டனை வழங்கி, தேனி மாவட்ட சிறப்பு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.உத்தமபாளையம் தாலுகாவை சேர்ந்த 9 வயது சிறுமி. 'டியூசன்' செல்லும் போதும், கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற போதும் கூலிதொழிலாளி செந்தில் பாலியல் ரீதியாத துன்புறுத்தினார். தனது உறவினர், பெற்றோரிடம் பாதிக்கப்பட்ட சிறுமி, நடந்த விபரங்களை தெரிவித்தார். அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். 2023 மார்ச் 20ல் செந்தில் மீது போக்சோ வழக்கு பதிந்த போலீசார், கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர் ரஷீதா ஆஜரானார். குற்றவாளி கூலித்தொழிலாளி செந்திலுக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி கணேசன் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார். பாதித்த சிறுமியின் நலன் கருதி, குற்றவாளியின் அபராத தொகையுடன் ரூ.ஒரு லட்சம் நிவாரணம் அரசு வழங்க வேண்டும். அதில் சிறுமியின் கல்வி, மருத்துவத்திற்காக ரூ. 25 ஆயிரம் பணம் உடனடியாக வழங்க வேண்டும். மீதமுள்ள இழப்பீட்டுத் தொகை ரூ.75 ஆயிரத்தை சிறுமி உரிமை வயது அடையும் வரை அவர் பெயரில் வங்கியில் நிரந்தர வைப்பீட்டுத் தொகையாக செலுத்த வேண்டும் என, தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.