வேளாண் விரிவாக்க மையங்களில் 192 டன் நெல் விதைகள் கையிருப்பு
தேனி: மாவட்டத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்கள், துணை விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு வழங்க 192 டன் நெல் விதைகள் கையிருப்பு உள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்தனர்.மாவட்டத்தில் 8 வட்டாரங்களில் தலா ஒரு வேளாண் விரிவாக்க மையங்கள் உள்ளன. இது தவிர பெரியகுளம், போடி, சின்னமனுாரில் தலா 3, தேனி, கம்பத்தில் தலா 2, உத்தமபாளையத்தில் ஒன்று என மொத்தம் 14 துணை வேளாண் விரிவாக்க மையங்கள் உள்ளன. இவற்றில் விவசாயிகளுக்கு தேவையான விதைகள் விற்பனை செய்யப்படுகின்றன.இவ்விரிவாக்க மையங்களில் தற்போது நெல் ரகங்கள் சி.ஓ.,55 ரகம் 30 டன், என்.எல்.ஆர்.,3448 ரகம் 27 டன், ஆர்.என்.ஆர்., 15048 ரகம் 120 டன், ஏ.டி.டி.,54 ரகம் 15 டன் என மொத்தம் 192 டன்கள் விற்பனைக்கு உள்ளன. இது தவிர கம்பு, குதிரைவாலி, துவரை, உளுந்து, பச்சைபயறு, தட்டைபயிறு, நிலக்கடலை, எள் விதைகள் உள்ளன. தேவைப்படும் விவசாயிகள் வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி மானிய விலையில் வாங்கி கொள்ளலாம் என வேளாண்துறையினர் தெரிவித்தனர்.