ஆன்லைன் மோசடிக்கு சிம் கார்டு வழங்கிய 4 பட்டதாரிகள் கைது; கம்போடியாவில் இருந்து இயக்கப்படும் வங்கி கணக்குகள்
தேனி: தேனி டாக்டரிடம் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் என கூறி ரூ. 18 லட்சம் மோசடி செய்த வழக்கில், வங்கி கணக்கு துவங்கி சிம்கார்டு வாங்கி கொடுத்து உதவிய திருநெல்வேலியைச் சேர்ந்த 4 பட்டதாரிகளை போலீசார் கைது செய்தனர்.தேனியை சேர்ந்த டாக்டர் தினேஷ்குமார் 28. தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறார். இவரை 2024 ஜூலையில் டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட நபர் anzocapital.comஇணையதளம் மூலம் ஆன்லைன் டிரேடிங் செய்து லாபம் பெறலாம் என்றார். இதனை நம்பிய டாக்டர் குறிப்பிட்ட இணைய முகவரியில் தனி ஐடியை உருவாக்கி செப்.,2024க்குள் ரூ.18.12 லட்சத்தை செலுத்தினார். லாபமாக வந்த தொகை எடுக்க முடியாமல் ஏமாற்றமடைந்தார். மோசடியை உணர்ந்த டாக்டர் தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.இவர் பணம் செலுத்திய ஒரு வங்கி கணக்கு திருப்பூரில் இருப்பது தெரிந்தது. அந்த கணக்கை இயக்கிய ராமகிருஷ்ணன் 25, கணக்கின் உரிமையாளர் தவுபிக்கை 23 ,போலீசார் கடந்த டிச.,ல் கைது செய்தனர். மற்றொரு வங்கி கணக்கு விழுப்புரத்தில் செயல்படுவது தெரிந்தது. அந்த கணக்குடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண் திருநெல்வேலி கோபி 21, என்பவர் பெயரில் இருந்தது. விசாரணையில் கோபி சிம்கார்டுகளை வாங்கி விழுப்புரம் விஸ்வா என்பவரிடம் வழங்கி உள்ளார். அவர் ஒரு சிம் கார்டிற்கு ரூ.ஆயிரம் வழங்கியதை நண்பர்கள் முத்துக்கிருஷ்ணன்24, ஆனந்தகுமார் 25, ஆனந்த செல்வக்குமார் 24, ஆகியோரிடம் கூறினார். நால்வரும் சேர்ந்து 70க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை வாங்கி விஸ்வாவிடம் விற்பனை செய்தனர். சிம்கார்டுகளை விற்பனை செய்தவர்களை தேனி சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர்.இவர்களை பிப்.,7 வரை நீதிமன்ற காவலில் வைக்க தேனி நீதித்துறை நடுவர் உத்தரவிட்டுள்ளார். விசாரணையில் விஸ்வா இந்த சிம்கார்டுகள் மூலம் வங்கி கணக்குகளை துவங்கி, அதனை கம்போடியாவில் உள்ள சத்தியமூர்த்திக்கு விற்பனை செய்துள்ளார். கம்போடியாவில் இருந்து வங்கி கணக்குகளை இயக்கி வருவது தெரிய வந்துள்ளது.