கார்கள் நேருக்கு நேர் மோதல் 8 ஐயப்ப பக்தர்கள் காயம்
கூடலுார்: குமுளி மலைப் பாதையில் கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 8 ஐயப்ப பக்தர்கள் காயமடைந்தனர்.திருவண்ணாமலையிலிருந்து சபரிமலைக்குச் சென்ற ஐயப்ப பக்தர்களின் காரும், சபரிமலையில் தரிசனம் முடித்து திரும்பிய தருமபுரியைச் சேர்ந்த காரும் குமுளி மலைப்பாதை வழிவிடும் முருகன் கோயில் அருகே நேருக்கு நேர் மோதியது. இதில் திருவண்ணாமலையைச் சேர்ந்த டிரைவர் சிவலிங்கம் 42, ரங்கநாதன் 75, குப்புசாமி 55, பழனி 45, மற்றொரு காரில் வந்த தர்மபுரியைச் சேர்ந்த டிரைவர் ஆனந்தன் 35, முருகேசன் 55, கவின்ராஜ் 11, விஜய் பாலாஜி 10, ஆகிய எட்டு பேர் காயமடைந்தனர். கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். லோயர்கேம்ப் போலீசார் விசாரிக்கின்றனர்.சித்திரை விசுவுக்காக சபரிமலைக்கு தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் அதிகம் வருகின்றன. வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த மலைப்பாதையின் எல்லைப் பகுதியில் போலீசார் நிறுத்தி ஆலோசனை வழங்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.