ஒரே இடத்தில் ராமர், லட்சுமணர், பரதர், சத்ருகனுக்கு கோயில்கள் ஆடி முழுவதும் பெருந்திருவிழா கொண்டாட்டம்
கம்பம் : கேரளாவில் ஒரே இடத்தில் ராமர், லட்சுமணர், பரதர், சத்ருகன் சுவாமி கோயில்கள் அமைந்துள்ளன. ஆடி மாதம் இங்கு நடைபெறும் பெருந் திருவிழாவில் சுவாமி தரிசனம் செய்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் பாலா அருகில் உள்ள ராமபுரத்தில் ராமபிரான் கோயிலும், கூடப்புலம் என்ற இடத்தில் லட்சுமணர் கோயிலும், அமனக் கரையில் பரதர் கோயிலும், மேதிரி என்ற இடத்தில் , சத்ருகன் கோயிலும் அமைந்துள்ளது. இந்த நான்கு கோயில்களும் 3 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ளது. புராண காலத்தில் ரிஷிகளும், முனிவர்களும் நிர்மாணித்த வரலாற்று சிறப்பு மிக்க நான்கு கோயில்களில் மதிய பூஜைக்குள், நான்கு கோயில்களிலும் தரிசனம் செய்தால், பூர்வ ஜென்ம பாவங்கள். தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முழுவதும் இந்த கோயில்களில் பெருந் திருவிழா நடைபெறும் . இதில் பங்கேற்று ஒரே நாளில் ஸ்ரீராமபிரான் மற்றும் அவரது சகோதர தெய்வங்களை தரிசிப்பது சிறப்பாகும். இந்தியாவில் வேறு எங்கும் ராமபிரானுக்கும் அவரது சகோதரர்களுக்கும் இது போன்று கோயில்கள் இல்லை என்கின்றனர். இந்த திருவிழாவை நான்கு கோயில் தரிசனம் (நாலாம்பல தரிசனம்) என்றழைக்கின்றனர்.இந்த ஒரு மாத திருவிழா காலத்தில் கேரளாவில் அனைத்து பகுதிகளில் இருந்தும் கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.ஆடி மாதம் மட்டும் தரிசன நேரம் காலை 5:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை இருக்கும். ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 16 வரை திருவிழா நடைபெறுகிறது.