வீரபாண்டி - வயல்பட்டி பைபாஸ் ரோட்டில் விபத்து அபாயம்
தேனி: தேனி வீரபாண்டி வயல்பட்டி நான்கு ரோடு சந்திப்பில் விபத்துக்களை தடுக்க வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் அகற்றியதால் அப்பகுதியில்விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் - குமுளி பைபாஸ் ரோட்டில் வயல்பட்டி வீரபாண்டி ரோடு சந்திப்பு உள்ளது. இந்த நான்கு ரோடு சந்திப்பில் பகல், இரவு என 24 மணி நேரமும் வாகனங்கள் செல்கின்றன. தற்போது சபரிமலை மண்டல கால பூஜை முடிந்து, மகரஜோதிக்கான நடை திறக்க உள்ளதால் ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் அதிகரித்துள்ளன. ஏற்கனவே வீரபாண்டி போலீசார் இப்பகுதியில் நடந்த விபத்துக்களை தடுக்கும் வகையில் இரும்பு தடுப்புக்களை அமைத்து, வாகனங்களின் வேகத்தைகுறைக்க நடவடிக்கை எடுத்தனர். சில நாட்களாக அப்பகுதியில் உள்ள இரும்பு தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளன. இதனால் விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பகலில் வயல்பட்டியில் இருந்து டூவீலரில் வருவோர், வீரபாண்டியில் இருந்து பைபாஸ் ரோட்டிற்கு வரும் வாகனங்கள் பிற வாகனங்களுடன் மோதி விபத்துஏற்பட்டு, உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் போலீசார் இரும்பு தடுப்புகளை அமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.