ஊராட்சிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை தேவை
கம்பம்: ஊராட்சிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்வதை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்வது உள்ளாட்சி நிர்வாகங்களின் கடமை. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பெரும்பாலும் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. காரணம் தேவையான வரி வருவாய் உள்ளதால் இப் பணியை எளிதில் செய்து கொள்கின்றனர். ஆனால் ஊராட்சிகளில் போதிய வரி வருவாய் இல்லை. மின் கட்டணம், பணியாளர் சம்பளம், தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் அனைத்திற்கும் அரசின் மானியத்தை எதிர்பார்த்தே ஊராட்சிகள் உள்ளன.தற்போது மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் கட்டமைப்பை மேம்படுத்த தேவையான அளவு நிதி ஒதுக்கீடு ஊராட்சிகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி ஊராட்சிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய ஊராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் பல ஊராட்சிகளில் ஜல் ஜீவன் பணிகள் முழுமை பெறாத நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் ஊராட்சிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சப்ளைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.