இடுக்கியில் 6 நாட்களில் ரூ.1.46 கோடி மதிப்பிலான விளை பொருட்கள் சேதம் வேளாண்துறை கணக்கெடுப்பில் தகவல்
மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் பெய்த கன மழையால் கடந்த ஆறு நாட்களில் ரூ.1.46 கோடி மதிப்பில் விளைப் பொருட்கள் சேதமடைந்துள்ளதாக வேளாண் துறையின் முதல்கட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இம்மாவட்டத்தில் அக்.16 மாலை முதல் ஓரிரு நாட்கள் கன மழை பெய்தது. அதனால் மண், நிலச்சரிவு, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. குறிப்பாக விவசாயம் விளைச்சல் பாதிக்கப்பட்டது. ஏலம், காபி, மிளகு, கிராம்பு, கொக்கோ, நெல், பல்வேறு காய்கறிகள் உள்பட பல பயிர்கள் பெரும் அளவில் சேதமடைந்தன. குறிப்பாக கட்டப்பனை, பீர்மேடு, சக்கு பள்ளம், வண்டன்மேடு, கருணாபுரம், வாத்திகுடி, காஞ்சியாறு ஆகிய பகுதிகளில் விளை பொருட்கள் அதிகம் சேதமடைந்தன. அப்பகுதிகளில் அக்.16 முதல் அக்.21 வரையிலான கால அளவில் 998 விவசாயிகளின் 76.41 எக்டேர் நிலங்களில் பயிரிடப்பட்ட ரூ.1.46 கோடி மதிப்பில் விளை பொருட்கள் சேதமடைந்ததாக வேளாண் துறையின் முதல்கட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.