தொடர் மழை பெய்தும் நீர்வரத்து இல்லாத ஆண்டிபட்டி கண்மாய்கள்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் தொடர்மழை பெய்தும் கண்மாய்களுக்கு நீர் வரத்து இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.ஆண்டிபட்டி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் மானாவாரி நிலங்களில் மழை பெய்தால் மட்டுமே ஆண்டுக்கு ஒருபோக விவசாயம் என்ற நிலை உள்ளது. தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழையால் கிடைக்கும் நிலத்தடி நீரை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் கிணறுகள், போர்வெல் நீரை பயன்படுத்தி இறவைப்பாசனம் நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களில் பெய்த மழையில் தற்போது ஆண்டிபட்டி பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரம் அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை வேலப்பர் கோயில் பகுதியில் உற்பத்தியாகும் நாகலாறு ஓடையை நம்பி தெப்பம்பட்டி, கோத்தலூத்து, பிச்சம்பட்டி, ஆசாரிபட்டி, ஜம்புலிப்புத்தூர், ரெங்கசமுத்திரம் கண்மாய்களும், ஏத்தக்கோவில் மலைப்பகுதியில் இருந்து வரும் ஓடை மூலம் மறவபட்டி, ஏத்தக்கோவில் கண்மாய்களும் உள்ளன. வடகிழக்கு பருவமழை கடந்த சில வாரங்களாக அடுத்தடுத்து பெய்துள்ளது. டிசம்பர் 12 முதல் 14 வரை தொடர்மழையும் பெய்துள்ளது. அடுத்தடுத்து மழை பெய்தாலும் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு போதுமான நீர் கிடைக்காததால் கண்மாய்களை நம்பி உள்ள பாசன விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். விவசாயிகள் கூறியதாவது: கண்மாய்களுக்கு வரும் நீர் வரத்து பாதைகளில் தடுப்பணைகள் அதிக இடங்களில் கட்டப்பட்டுள்ளன. நீர்வரத்து கால்வாய்கள் பராமரிப்பு இல்லை. இதனால் கண்மாய்களில் நீர் தேங்கவில்லை. விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள ஆண்டிபட்டி பகுதியில் மழைக்காலத்தில் கிடைக்கும் நீரை கண்மாய்களில் தேக்கும் நடவடிக்கை இல்லை. ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கண்மாய்களின் தற்போதைய நிலை, நீர் தேக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து வரும் காலங்களிலாவது கண்மாய்களில் நீர் தேக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.