ஆண்டிபட்டி தாலுகா ஆபீசில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுது
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்ததை சரி செய்ய வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்திற்கு 50 முதல் 100 கி.மீ., தூரத்தில் உள்ள மலைக் கிராமங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அலுவலகத்தில் செயல்படும் இ சேவை மையம், ஆதார் மையம் ஆகியவற்றில் தினமும் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் பராமரிப்பு பணி நடந்தது. அப்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கான குடிநீர் வழங்கும் மெஷின் தேர்தல் பிரிவு கட்டிடம் அருகே அமைக்கப்பட்டது. உவர்ப்பு நீரை சுத்திகரிப்பு செய்து குடிநீராக வழங்கும் இயந்திரம் மூலம் பலரும் பயன்பெற்றனர். கடந்த சில வாரங்களாக சுத்திகரிப்பு இயந்திரம் பழுதானதால் குடிநீர் பெற முடியவில்லை. வருவாய் துறையினர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.