தொல்லியல் அறிஞர் கே.வி.ராமன் மறைவு
சென்னை:மூத்த தொல்லியல் அறிஞர் கே.வி.ராமன், 80; நேற்று மதியம் சென்னையில் காலமானார்.செங்கல்பட்டில், 1934ல் பிறந்த இவர், சென்னை கிறிஸ்தவ கல்லுாரியில் படித்தவர். மத்திய தொல்லியல் துறையின் சென்னை வட்டார கண்காணிப்பாளராக பணியாற்றிய இவர், புதுச்சேரியின் அரிக்கமேடு அகழாய்வு, காவிரிபூம்பட்டினம் கடலாய்வு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டவர்.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்லவர்களின் கோவில் கட்டடக்கலை, சிற்பக்கலைகள் குறித்தும், தொல்லியல், நாணயவியல் உள்ளிட்டவை குறித்து நிறைய நுால்களை எழுதியுள்ளார். சென்னை பல்கலையின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை பேராசிரியராகவும் பணியாற்றியவர். இவர், யுனெஸ்கோவின் பிராந்திய கல்வி விருது பெற்றவர். காமன்வெல்த் பல்கலை சங்க மூத்த உறுப்பினராக்கப்பட்டு கவுரவிக்கப்படவர்.இவர், மந்தவெளிப்பாக்கம், 4வது டிரஸ்ட் குறுக்குத்தெருவில் உள்ள வானவில் குடியிருப்பில் உள்ள வீட்டில் நேற்று மதியம், காலமானார். இவரின் இறுதிச்சடங்குகள், அவரின் இல்லத்தில் இன்று காலை, 10:00 மணிக்கு நடக்கும். அதைத் தொடர்ந்து, இவரின் உடல், மயிலாப்பூர் சுடுகாட்டில் எரியூட்டப்பட உள்ளது.