ஐயப்பன் கோயில் மார்கழி உற்ஸவ விழா
ஆண்டிபட்டி: சக்கம்பட்டி நன்மை தருவார் ஐயப்பன் கோயில் மார்கழி உற்ஸவ விழா நடந்தது. இக்கோயில் வளாகத்தில் ஐயப்ப சுவாமிக்கு தனி சன்னதி, 49 அடி உயர மாகாளியம்மன், ஐய்யனார், பத்ரகாளி அம்மன் சக்தி பீடங்கள், குபேர பீடத்தில் குருபகவான் தனித்தனியாக அமைக்கப்பட்டு, பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் நடக்கும் மார்கழி உற்ஸவ விழாவில் பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் பங்கேற்பர். இரு நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் முதல் நாளில் ஐயப்ப சுவாமிக்கு 1008 பூஜையுடன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அம்மன் கரகம், முளைப்பாரி ஊர்வலம் சென்றனர். இரவில் ஐயப்ப சுவாமி, அம்பாள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சக்கம்பட்டி, ஆண்டிபட்டி, கொண்டம நாயக்கன்பட்டி பகுதிகளில் முக்கிய வீதிகள் வழியாக சென்ற வீதிஉலா நடந்தது. வீடுதோறும் உள்ள பொது மக்கள் சுவாமி தரிசனம் பெற்றனர். 2ம் நாளில் காலை கணபதி ஹோமம் நடந்தது. பக்தர்கள் தீச்சட்டி எடுத்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். குரு பகவான் குபேர ஹோமம் அதனை தொடர்ந்து 49 அடி உயர மாகாளியம்மனுக்கு 108 குடங்கள் பாலாபிஷேகம், பூச்சொரிதல் விழா நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. உற்ஸவ விழா ஏற்பாடுகளை கோயில் நிறுவனர் முத்து வன்னியன் தலைமையில் பக்தர்கள் குழு வினர் செய்திருந்தனர்.