பணி நிரந்தரத்திற்காக 14 ஆண்டுகள் காத்திருக்கும் பொ.ப.து., ஊழியர்கள்
தேனி:பொதுப்பணித்துறையில் பணிநிரந்தரத்திற்காக 14 ஆண்டுகளாக (என்.எம்.ஆர்.,) தற்காலிக பணியாளர்கள் காத்திருக்கின்றனர்.பொதுப்பணித்துறை தற்போது பொதுப்பணி, நீர்வளத்துறை என இரு பிரிவுகளாக உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு ஆய்வு மாளிகை, நீதிபதிகள் குடியிருப்பு, விருந்தினர் மாளிகை உள்ளிட்டவை பராமரித்தல், துறை சார்ந்த களப்பணிகளில் தற்காலிக தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நீர்வளத்துறையில் ஷட்டர் பராமரிப்பு, அணைகள், நீர்தேக்க பகுதிகளில் கண்காணிப்பு, அலுவலக உதவியாளர்களாக பணி புரிகின்றனர். பொதுப்பணித்துறையில் 10 ஆண்டுகள் பணிபுரிந்தால் பணி நிரந்தரம் என்ற விதியின் அடிப்படையில் 2001 அதற்கு முன் பலர் பணியில் சேர்ந்தனர். அவர்களை பணி நிரந்தம் செய்ய 2011ல் அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டது. அந்த அறிக்கை பற்றி இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லை. இந்த 14 வருடங்களில் என்.எம்.ஆர்., எனும் தற்காலிக பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் ஓய்வு பெற்றுவிட்டனர். தற்போது மாநிலத்தில் 1457 பேர் பணியில் உள்ளனர். இவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.தொழில் நுட்ப களப்பணியாளர் சங்க மாநில துணை செயலாளர் ரமேஷ்குமார் கூறுகையில், ' பணி நிரந்தரம் கோரி திருச்சியில் ஏப்.6ல் ஆலோசனைக்கூட்டம் நடத்தவும், அதைத்தொடர்ந்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டமும் நடத்த உள்ளோம்', என்றனர்.