போஸ்ட் மாஸ்டருக்கு பளார் கம்யூ., கட்சியினர் மீது வழக்கு
மூணாறு : இடுக்கி மாவட்டம் பீர்மேட்டில் போஸ்ட் மாஸ்டரை கன்னத்தில் அறைந்த சம்பவத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.மத்திய அரசுக்கு எதிராக எதிர்கட்சிகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஜூலை 9ல் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். அப்போது பீர்மேடு தபால் அலுவலகத்தில் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றும் மாடசாமியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கன்னத்தில் அறைந்து தாக்கினர்.சம்பவத்தன்று தபால் அலுவலகத்திற்குள் போராட்டகாரர்கள் நுழைந்ததால் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அதனை தவிர்ப்பதற்காக தபால் அலுவலகத்தை மூட முயன்ற போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தாக்கினர் என மாடசாமி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.இச்சம்பவத்தில் தொடர்புடைய மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் திலகன், பீர்மேடு பகுதி செயலாளர் பிரசன்னன், பீர்மேடு ஊராட்சி தலைவர் தினேசன் உட்பட ஏழு பேர் மீது பீர்மேடு போலீசார் ஜாமின் பெற இயலாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.